ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தினை சேர்ந்தவர் சோகன்ராம் நாயக். சம்பவ தினத்தன்று இவர் தனது வளர்ப்பு ஒட்டகங்களை வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். வயலில் கயிறால் கட்டப்பட்டிருந்த ஒட்டகம் ஒன்று மற்றொரு ஒட்டகத்தை கண்டு ஆவேசமாக கயிற்றினை அவிழ்த்து கொண்டு ஓடியுள்ளது. இதனை கண்ட சோகன்ராம் நாயக் அந்த ஒட்டகத்தை பிடிக்க முயன்றபொழுது அது அவரது கழுத்தினை இறுக்கி பிடித்துள்ளது. தொடர்ந்து சோகன்ராம் மகன் மோகன் ராம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தோர் குச்சிகளை வைத்து ஒட்டகத்தை மிரட்டியுள்ளனர். எனினும் அந்த ஒட்டகம் பிடியைவிடாமல் இருந்ததால் அவரது கழுத்தில் கயிறு மேலும் இறுக்கப்பட்டுள்ளது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சோகன்ராம் பரிதாபமாக உயிரிழந்தார். சோகன் ராம் உயிரிழந்ததால் அப்பகுதி மக்களும் அவரது குடும்பத்தாரும் பெரும்சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஒட்டகத்திற்கு மனநலம் சரியில்லை என்று கூறிய கிராமவாசிகள்
இதனையடுத்து, அந்த ஒட்டகத்தை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், அதனை ஒரு மரத்தில் கட்டிவைத்து குச்சிகளை கொண்டு அடித்துள்ளார்கள். இதனால் அந்த ஒட்டகம் இறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த கிராம மக்களிடம் கேட்ட பொழுது, ஒட்டகத்திற்கு மனநலம் சரியில்லை. அதனால் தான் யாரென்று அடையாளம் தெரியாமல் தனது உரிமையாளரையே கொன்றுள்ளது. இதனை அப்படியே விட்டால் கிராமத்தில் உள்ள அனைவரையும் வெறி கொண்டு தாக்கக்கூடும். அதனால் தான் அதனை கொன்றோம் என்று கூறியுள்ளார். கடந்த 20நாட்களுக்கு முன்னர் தான் சோகன் ராம் அந்த ஒட்டகத்தை வாங்கியதாகவும், இயல்பிலேயே அது முரட்டுத்தனம் கொண்டதாக தான் இருந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து எவ்வித புகாரும் அளிக்கப்படாத காரணத்தினால் வழக்குகளும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.