துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
தேசிய பேரிடர் மீட்புப் படையின்(NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு ஒன்றும், திறமையான நாய்ப் படைகள் ஒன்றும் இந்திய விமானப்படை(IAF) விமானத்தில் நேற்று(பிப் 7) இந்தியாவில் இருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்டது. துருக்கியில் நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மீட்பு பணிகளில் உதவ இந்த படைகள் அனுப்பப்பட்டன. அனுப்பட்ட நாய் படையில் ஜூலி, ரோமியோ, ஹனி மற்றும் ராம்போ ஆகிய நாய்கள் அடங்கும். பேரிடர் மீட்புப் படையின்(NDRF) 101 உறுப்பினர்களைக் கொண்ட ஆண் சகாக்களுடன் மீட்புப் பணிகளில் இந்த 4 நாய்களும் ஈடுபட்டுள்ளது. இவை மோப்பம் பிடித்தல் மற்றும் பிற முக்கிய திறன்களில் நிபுணத்துவம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற லாப்ரடோர் இன நாய்களாகும்.
திறமை வாய்ந்த அதிகாரிகள் மற்றும் நாய் படை
பெரும் நிலநடுக்கங்களால் பேரழிவிற்குள்ளான துருக்கியின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நாய் படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ள நாய்ப் படை மற்றும் 101 குழு உறுப்பினர்கள் எல்லா வகையிலும் தேவையான அனைத்து அதிநவீன தேடல், மீட்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் அனுப்பப்பட்டுள்னர் என்று NDRF டைரக்டர் ஜெனரல் அதுல் கர்வால் ANI இடம் கூறியுள்ளார். NDRF குழுவினர் துருக்கிய அதிகாரிகளுக்கு தேவைக்கு ஏற்ப நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவி செய்வார்கள் என்றும் அவர் கூறி இருக்கிறார். NDRF இன் குழுவானது கமாண்டன்ட் குர்மிந்தர் சிங் தலைமையில் டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.