துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள்
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது. இந்த பேரழிவை சமாளித்து வரும் துருக்கிக்கு உதவ இந்திய சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம். நிவாரணப் பொருட்கள்(முதல் தொகுதி): நிலநடுக்க நிவாரணப் பொருட்களின் முதல் தொகுதியை இந்தியா இன்று(பிப் 7) துருக்கிக்கு அனுப்பியது. நிபுணத்துவ தேசிய பேரிடர் மீட்புப் படையின்(NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு ஒன்றும், திறமையான நாய்ப் படைகள் ஒன்றும் இந்திய விமானப்படை(IAF) விமானத்தில் துருக்கிக்கு புறப்பட்டன. மருத்துவப் பொருட்கள், மேம்பட்ட துளையிடும் கருவிகள் மற்றும் பிற முக்கியமான கருவிகளை முதல் தொகுதியில் இந்தியா அனுப்பியுள்ளது.
சிரியாவுக்கும் உதவ இருக்கும் இந்தியா
நிவாரணப் பொருட்கள்(இரண்டாம் தொகுதி): 1 கமாண்டர், 50 மீட்புப் பணியாளர்கள், 1 NDRF மருத்துவர், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது விமானம் இன்று காலை 11 மணிக்கு காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் ஏர்பேஸில் இருந்து துருக்கிக்கு புறப்பட்டது. சிரியாவுக்கு உதவி: இந்திய விமானப்படையின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானத்தில் சிரியாவுக்கு மருத்துவப் பொருட்களை இந்தியா இன்று(பிப் 7) அனுப்ப உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிறுவனங்கள் உதவி: இந்திய விமான நிறுவனங்களிடம் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உதவி கேட்டதை அடுத்து, இண்டிகோ நிறுவனம் துருக்கி செல்லும் தங்கள் வர்த்தக விமானத்தை சரக்குகள் ஏற்றி செல்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அரசுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.