72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு
இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றமான கொல்கத்தா உயர் நீதிமன்றம், 72 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மிகப் பழமையான வழக்கை தீர்த்துவைத்துள்ளது. இதன் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, 1951 இல் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பிறகு பிறந்தவர். இது முந்தைய பெர்ஹாம்பூர் வங்கி லிமிடெட் கலைக்கப்பட்டது தொடர்பான வழக்காகும். 1952 இல் தாக்கல் செய்யப்பட்ட நாட்டின் மிகப் பழமையான நிலுவையில் உள்ள இரு வேறு வழக்குகளை நீதிமன்றம் இன்னும் விசாரித்து வருகிறது. இந்த இரண்டு வழக்குகளும் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள சிவில் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் மீதான விசாரணை இந்த ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும்.
பெர்ஹாம்பூர் வழக்கு
பெர்ஹாம்பூர் வழக்கு, இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு என்று தேசிய நீதித்துறை தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 19, 1948 இல் திவாலான பெர்ஹாம்பூர் வங்கியின் செயல்பாடுகளை நிறுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கியது. திவாலான வங்கி கடனாளிகளிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்காக பல வழக்குகளில் சிக்கியது. இந்த கடனாளிகளில் பலர் வங்கியின் உரிமைகோரல்களை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினர். வங்கி கலைப்பு உத்தரவை எதிர்க்கும் மனு செப்டம்பர் 2022 இல் இரண்டு முறை விசாரணைக்கு வந்தது, ஆனால் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு 2006ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் தகவல் புதுப்பிக்கப்படாததால் இது நிலுவையிலேயே இருந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.