மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று(ஜன:13) அறிவித்தார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், 2023 ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும். 27 அமர்வுகள் 66 நாட்களுக்குள் வழக்கமான விடுமுறையுடன் இது நடைபெறும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. ஜனாதிபதியின் உரை, யூனியன் பட்ஜெட் மற்றும் பிற விஷயங்கள் இதில் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் ஜோஷி ஒரு ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் என்ன இருக்கும்?
"பட்ஜெட் அமர்வின் போது, 2023 பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை இடைவேளையாக இருக்கும். இந்த இடைவேளை, மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்யவும், அவற்றின் அமைச்சகங்கள்/துறைகள் தொடர்பான அறிக்கைகளை உருவாக்கவும் உதவும்" என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 16 அன்று தனது வரவிருக்கும் பட்ஜெட் பொதுச் செலவினங்களின் பின்னணியில் வளர்ச்சியை நோக்கி இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இது பிரதமர் மோடியின் அரசாங்கம் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 5வது பட்ஜெட் கூட்டத்தொடராகும். அடுத்த வருடம் நடைபெறவுள்ள கூட்டத்தொடர்(பட்ஜெட் 2024) பொதுத் தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் கூட்டத்தொடராக இருக்கும்.