ராஜினாமா செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர போவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களில், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தெரிவித்தார்.
முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார்.
அவர் தனது கடிதத்தின் நகல்களை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதிபதி கங்கோபாத்யாய் இன்று காலை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவரது அறைக்கு வந்தார். அதைத் தொடர்ந்து அவரது ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டது.
கொல்கத்தா
"திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிதைந்துவிடும்": உயர்நீதிமன்ற நீதிபதி
அதற்கு பிறகு அவர் கலந்து கொண்ட செய்தியாளர் கூட்டத்தில், அவர் பாஜகவில் சேரப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
அந்த கூட்டத்தில் பேசிய கங்கோபாத்யாய், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது, "திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிதைந்துவிடும்," என்று கூறினார்.
அந்த கட்சியை சேர்ந்த இன்னும் 2 பேர் கைது செய்யப்பட்டால் அந்த கட்சி இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய அவர், பிரதமர் மோடி மிகவும் நல்ல தலைவர் என்றும் கூறினார்.
தேர்தலில் போட்டியிடுவேனா இல்லையா என்பது தனக்கு தெரியாது என குறிப்பிட்ட அவர், "அது பாஜகவின் கையில் உள்ளது" என்று தெரிவித்தார்.