Loading...
ஒரே போன் நம்பரில் 2,000 ஃபேன்சி எண்கள்; 'VAHAN' தளத்தில் நடந்த முறைகேடு
ஃபேன்சி எண்கள் ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரே போன் நம்பரில் 2,000 ஃபேன்சி எண்கள்; 'VAHAN' தளத்தில் நடந்த முறைகேடு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
11:39 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் (CAG) மாநில வருவாய் குறித்த அறிக்கையில், வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் மற்றும் ரூ.133.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 முதல் 2023-24 வரையிலான VAHAN போர்ட்டல் தரவுகளை ஆய்வு செய்தபோது, ஃபேன்சி எண்களை மொத்தமாக பதுக்கி வைத்து மறுவிற்பனை அல்லது ஊக வணிகத்தில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

கண்டுபிடிப்பு

CAG அறிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்புகள்

4.16 லட்சம் தனித்துவமான மொபைல் எண்களை பயன்படுத்தி 6.75 லட்சம் ஃபேன்சி எண்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 53,000 மொபைல் எண்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு 3.12 லட்சம் ஃபேன்சி எண்கள் பெறப்பட்டுள்ளன.

3,355 வாகனப் பதிவுகளில், தனிநபர்களின் மொபைல் எண்கள் 11 முதல் 2,008 முறை வரை ஃபேன்சி எண்களை பெற பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஃபேன்சி எண்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச அடிப்படை தொகையான ரூ.40,000-ஐ விடக் குறைவான கட்டணம் வசூலித்ததால் 32,197 வாகனங்கள் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மோசடி

புதிய வாகனத்தை பதிவு செய்வதில் தாமதம்

25% வாகன உரிமையாளர்கள்(15,526 வாகனங்கள்) வாகனம் வாங்கிய பிறகு 1 முதல் 62 மாதங்கள் வரை பதிவைத் தாமதப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் கட்டணம் குறையும் வரை காத்திருந்து குறைந்த கட்டணத்தில் ஃபேன்சி எண்களைப் பெற்றுள்ளனர்.

ஒரே ஃபேன்சி எண்ணுக்கு('0007') துறையூர் RTO அலுவலகத்தில் ரூ.2,000-மும், சென்னை தெற்கு RTO-வில் ரூ.2 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த தணிக்கை அறிக்கை குறித்து அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், VAHAN தளத்தில் ஃபேன்சி எண் ஒதுக்கீடு ஆதார் அங்கீகாரம் அடிப்படையில் மாற்றப்பட்டு, ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி பல எண்களை பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முறைகேடுகளை தடுக்கவும் மின்னணு ஏல முறை மற்றும் கட்டண சீரமைப்பை கொண்டுவர வரைவு திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT