'சிஏஏ திரும்பப் பெறப்படாது': அமித் ஷா திட்டவட்டம்
குடியுரிமை (திருத்த) சட்டம் அமல்படுத்தப்பட்டது என தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அந்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். சிஏஏவை மாநிலங்கள் தடுக்க முடியாது என்றும் அமித் ஷா கூறியுள்ளார். "CAA ஒருபோதும் திரும்பப் பெறப்படாது. நமது நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதிசெய்வது எங்களின் இறையாண்மையான முடிவு, அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" என்று அமித் ஷா செய்தி நிறுவனமான ANI க்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசிய அமித் ஷா, "சிறுபான்மையினர் அல்லது வேறு யாரும் பயப்படத் தேவையில்லை. காரணம் சிஏஏவில் யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அதிகாரம் இல்லை" என்றார்.
"குடியுரிமை வழங்க மட்டுமே அதிகாரம், பறிப்பதற்கு இல்லை"
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி அகதிகளுக்கு உரிமைகள் மற்றும் குடியுரிமை வழங்க மட்டுமே சிஏஏ உள்ளது" என்று ஷா கூறினார். சிஏஏ மூலம் பாஜக புதிய வாக்கு வங்கியை உருவாக்குகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, உள்துறை அமைச்சர்,"எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. அவர்கள் சொல்வதை அவர்கள் செய்ய மாட்டார்கள்" என்று கூறினார். மேலும் சிஏஏ அறிவிப்பின் நேரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஷா, "அசாதுதீன் ஓவைசி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பொய் அரசியல் செய்கின்றன" என்றார்.