Page Loader
ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம்
புதிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் பைஜூஸ் நிறுவனம்

ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம்

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 26, 2023
05:50 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் இந்தியாவின் முன்னணி கல்வித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தங்கள் ஊழியர்களுக்கான மாதாந்திர PF தொகையை அந்நிறுவனம் தாமதமாகச் செலுத்துவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்தியாவில், மாதாந்திர சம்பளதாரர்களின் PF பணத்தை நிர்வகித்து வரும் அமைப்பான EPFO-வின் விதிமுறைகளின் படி, ஒரு மாதத்தின் PF தொகையை அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் குறிப்பிட்ட நிறுவனம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறினால், அதனால் ஏற்படும் சேதத்திற்கு குறிப்பிட்ட நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். மேலும், PF தொகையை தாமதமாகச் செலுத்தும் நிறுவனங்கள் மீது 5% முதல் 100% வரை அபராதம் விதிக்கவும் EPFO அமைப்பிற்கு அதிகாரம் இருக்கிறது.

பைஜூஸ்

எவ்வளவு தாமதமாகச் செலுத்துகிறது பைஜூஸ்?

பணியாளர்களின் PF பணத்தை செலுத்துவதில் பைஜூஸ் நிறுவனத்திடம் ஒரு ஒழுங்குமுறை இல்லை என்றே கூறப்படுகிறது. பணியாளர்களில் சிலருடைய PF பணத்தை நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குப் பிறகு மொத்தமாகச் செலுத்தியிருக்கிறது பைஜூஸ். சிலருக்கோ, ஒரு மாத இடைவெளியில் செலுத்தியிருக்கிறது. சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலருக்கு இன்னும் PF பணத்தை அந்நிறுவனம் செலுத்தவில்லை என முன்னாள் ஊழியர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அந்நிறுவன ஊழியர்களில் 10,000 - 13,000 ஊழியர்கள் மட்டுமே ஜனவரி, பிப்ரவர் மற்றும் மார்ச் மாதங்களுக்கான PF தொகையை பெற்றிருக்கின்றனர். 3,164 ஊழியர்கள் மட்டுமே ஏப்ரல் மாதத்திற்கான PF தொகையை பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தில் தற்போது 30,000 ஊழியர்களுக்கும் மேல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.