பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!
பிரபலமான ஆன்லைன் கற்றல் தளமான 'பைஜூஸ்' பெற்றோர்களை மிரட்டி தங்கள் தளத்தில் சேரவைப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் குறித்து பல பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரவீந்திரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளதாக NCPCR தலைவர் பிரியங் கானூங்கோ கூறியுள்ளார். பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ரவீந்திரன் கேட்கப்பட்ட ஆவணங்களோடு நாளை(டிச:23) நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பைஜூஸ் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.
பைஜூஸ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
இது குறித்து பேசிய NCPCR தலைவர் பிரியங் கானூங்கோ, "பைஜூஸ் நிறுவனம் பெற்றோர்களின் மொபைல் எண்களை தரகர்கள் மூலம் முறைகேடான வகையில் வாங்கியுள்ளது. பின், முதல் தலைமுறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் கல்வி கற்காத மற்றும் பொது விவரம் அறியாத பெற்றோரைக் குறிவைத்து மிரட்டியுள்ளனர். அவர்களுடன் நயமாக பேசி குழந்தைகள் தங்கள் நிறுவனத்தில் படிக்கவில்லை என்றால் மக்காகிவிடுவர் என்று மூளை சலவை செய்துள்ளனர். அவர்களை அதிகப்படியான கட்டணம் கட்ட சொல்லியும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க சொல்லி இருக்கிறோம். இந்த விசாரணைகள் அனைத்தும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்(2005) 14வது பிரிவிற்குக் கீழ் நடைபெற்று வருகிறது." என்று கூறியுள்ளார்.