LOADING...
2026 பட்ஜெட் அதிரடி: இந்திய நகரங்களுக்கு 'நிதிச் சுதந்திரம்'? மத்திய அரசின் மெகா பிளான்
நிதிச் சுதந்திரம் வழங்கும் புதிய திட்டத்தை 2026 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது

2026 பட்ஜெட் அதிரடி: இந்திய நகரங்களுக்கு 'நிதிச் சுதந்திரம்'? மத்திய அரசின் மெகா பிளான்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முக்கிய நகரங்கள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியை மட்டுமே நம்பியிருக்காமல், சுயமாக நிதி திரட்டும் வகையில் "நிதிச் சுதந்திரம்" (Financial Autonomy) வழங்கும் புதிய திட்டத்தை 2026 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நகரங்கள் தங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மாநகராட்சிப் பத்திரங்கள் (Municipal Bonds) மற்றும் இதர சந்தை முதலீடுகள் மூலம் நேரடியாக நிதி திரட்ட வழிவகை செய்யப்படும். நகரங்களின் வருவாயை அதிகரிக்க சொத்துவரி வசூலை முறைப்படுத்துவது மற்றும் நவீனப்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்கள் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே நகர மேம்பாட்டிற்காக மாநகராட்சி பாத்திரங்கள் அமலில் உள்ளதாக மின்ட் செய்தி தெரிவிக்கிறது.

விவரங்கள்

நிதி ஆயோக் பரிந்துரை

வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கலைச் சமாளிக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும் நிதி வலிமையும் தேவை என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த புளூபிரிண்ட் (Blueprint) தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு ஊக்கத்தொகை (Incentives) வழங்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது இந்தியாவின் பெரும்பாலான மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் நிதித் தேவைக்காக மாநில மற்றும் மத்திய அரசுகளின் மானியங்களையே நம்பியுள்ளன. இதனால் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. நகரங்கள் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைப் பெற வேண்டுமெனில், அவை நிதி ரீதியாகத் தற்சார்பு அடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.

நன்மைகள்

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு அதிகாரம்

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் ஆரம்பக்கட்ட நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும் இந்த திட்டத்தின் ஒரு பாகமாக திட்ட ஆலோசனை, ஆலோசனை ஆதரவு மற்றும் செயல்படுத்தல் பயிற்சி போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் நகராட்சிகள் வருவாயை ஈட்ட முடியும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னை, கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்கள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காகச் சொந்தமாக நிதி திரட்டும் அதிகாரத்தைப் பெற வாய்ப்புள்ளது.

Advertisement