மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி
2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பிஎஸ்பி கட்சிக்கு கூட்டணி அனுபவங்கள் ஒருபோதும் பலனளிக்கவில்லை என்று கூறி, வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தார். எனினும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கக்கூடிய சாத்தியங்கள் பற்றி மாயாவதி குறிப்பிடவில்லை. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி,"கூட்டணிகளால் அதிக இழப்புகளை சந்திக்கிறோம். இதன்காரணமாக, நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். முடிந்தால், தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தனது ஆதரவை வழங்கலாம்...எங்கள் கட்சி தனித்து போட்டியிடும்"எனக்கூறினார்.
ஓய்வு குறித்த ஊகங்களை மாயாவதி மறுப்பு
1990-2000 காலகட்டத்தில் உத்தரபிரதேசத்தில் பிஎஸ்பி ஒரு முக்கிய அரசியல் சக்தியாக இருந்தது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சரிவைக் கண்டது. 2022 சட்டமன்றத் தேர்தலில், அக்கட்சி 12.8% வாக்குகளை மட்டுமே பெற்றது. இதற்கிடையில், கடந்த மாதம் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது வாரிசாக நியமித்த பின்னர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த ஊகங்களை மாயாவதி மறுத்தார். "கடந்த மாதம், ஆகாஷ் ஆனந்தை எனது அரசியல் வாரிசாக அறிவித்தேன், அதைத் தொடர்ந்து நான் அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவேன் என்று ஊடகங்களில் ஊகிக்கப்பட்டது. இருப்பினும், அது அவ்வாறு இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மேலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றுவேன், "என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.