கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே கவிதா டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நேற்று மாலை அமலாக்க இயக்குனரகத்தால்(ED) ஹைதராபாத் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள EDயின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்துவதற்காக ED அவரை டெல்லிக்கு அழைத்து சென்றது. டெல்லியில் இறங்கியவுடன், அவர் EDயின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கே கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க இன்று காலை 10.30 மணிக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ED ஆஜர்படுத்தப்படும்.
ED தலைமையகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
இன்று காலை ED தலைமையகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா சட்டப் பேரவை உறுப்பினர் கே.கவிதாவின்(46) ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பல மணி நேரம் சோதனை நடத்திய அமலாக்க இயக்குநரகம் பணமோசடி வழக்கில் அவரை கைது செய்தது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் தென் மாநிலத்தை சேர்ந்த பிஆர்எஸ் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ED கூறியுள்ளது.