Loading...
புத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்களுக்கு தொடர்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
புத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்களுக்கு தொடர்புள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

புத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்களுக்கு தொடர்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
05:26 pm

செய்தி முன்னோட்டம்

கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை கொள்முதல் செய்ததில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பான வழக்கில், மேலும் இரண்டு பதிப்பகங்களுக்கு தொடர்புள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ. பரந்தாமன் தாக்கல் செய்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனுக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டு அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 'சிக்மா' மற்றும் 'வித்யா' ஆகிய இரண்டு பதிப்பகங்களுக்கும் இதில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஐ புத்தகங்கள் அகற்றம்

3 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் நடந்த முறைகேடு

கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இதுபோன்ற ஏஐ புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தற்போது அந்தப் புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும், 2024-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வகுத்துக் கொடுத்த கொள்முதல் கொள்கையை அதிகாரிகள் முறையாகப் பின்பற்றியிருந்தால் இந்த முறைகேட்டைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் முன்வந்தால் அவர்களது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

நவம்பர் 25க்கு ஒத்திவைப்பு

அகல்விளக்கு உரிமையாளரைக் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்

இவ்வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுப் பல அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனைக் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என மதுரை அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு நகலைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT