சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கிருந்து எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(டிச.,27) திடீரென எண்ணெய்யை வெளியேற்றக்கூடிய பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பாய்லர் வெடித்த பலத்த சத்தத்தில் அச்சமடைந்த நிறுவனத்தின் உள்ளிருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர். அப்பகுதி மக்களும் இந்த சத்தம் கேட்டு அச்சமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் 2 ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
சிகிச்சை பலனின்றி ஊழியர் ஒருவர் பலி
சரவணன், பெருமாள் என்னும் இந்த 2 ஊழியர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் பெருமாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளது. இதற்கிடையே, இந்த விபத்தால் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. இது குறித்த தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தண்டையார்பேட்டை பகுதி சுற்றுவட்டாரத்தில் பல எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து எண்ணெய் கசிவால் தான் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.