Page Loader
வேளச்சேரியில் 60 அடிபள்ளத்திலிருந்து 21 வயது வாலிபரின் உடல் மீட்பு, மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்
பள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் மீட்பு படையினர்.

வேளச்சேரியில் 60 அடிபள்ளத்திலிருந்து 21 வயது வாலிபரின் உடல் மீட்பு, மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்

எழுதியவர் Srinath r
Dec 08, 2023
12:27 pm

செய்தி முன்னோட்டம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வேளச்சேரியில் ஏற்பட்ட 60 அடி பள்ளத்தில் சிக்கிய, 21 வயது வாலிபரின் உடல் 100 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில், டிசம்பர் 4ம் தேதி அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பணியாற்றிக் கொண்டிருந்த, நரேஷ் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. நரேஷ் மீட்கப்படுவார் என நம்பி அப்பகுதியில் காத்திருந்த குடும்பத்தினர், தற்போது அவரின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அப்பள்ளத்தில் சிக்கியுள்ள ஜெயசீலன், அடையாளம் தெரியாத புலம்பெயர்ந்த தொழிலாளியை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

2nd card

விடுமுறை நாளிலும் பணிக்கு வரச் சொன்ன பெட்ரோல் பங்க் நிர்வாகம்

பள்ளம் ஏற்பட்ட கட்டுமான தளத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில், நரேஷ் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வேளச்சேரியில் உள்ள மற்றொரு பங்கில் வேலை பார்த்து வந்த நரேஷ், ஆட்பற்றாக்குறையால் மூன்று நாட்களுக்கு முன்னர் இங்கு பணியில் சேர்ந்தார். இந்நிலையில், அரசு விடுமுறையான 4ம் தேதியன்று நரேஷை பணிக்கு வரச் சொல்லி, பெட்ரோல் பங்க் நிர்வாகம் அழைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நரேஷ் அதற்கு முன்னர் தொடர்ந்து மூன்று நாட்கள் பணியில் இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

3rd card

சம்பவ இடத்தில் பெருநகர சென்னை மாநகர ஆணையர் ஆய்வு

பள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டுமான நிறுவனம் இங்கு செய்து வந்த பணிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதன் பின், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மண்சரிவு ஏற்பட்டதனால் மீட்பு பணிகளில் அவ்வப்போது தாமதம் ஏற்படுவதாக கூறிய ஆணையர், முதல்வர் மீட்பு பணிகள் குறித்து தினசரி விசாரிப்பதாகவும் கூறினார்.