ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் இணைப்பு அங்கீகரிப்பு
எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய பெருநிதி நிறுவனங்களின் இணைப்பு கடந்த வருடம் அறிவிக்கப்பட்டு, இந்த மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான ஐடிஎஃப்சியுன் புதிய இணைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் முக்கியமான வங்கிகளில் ஒன்றாகச் செயல்பட்டு வரும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியும், ஐடிஎஃப்சி நிறுவனமும் இணைப்பதற்கான கோரிக்கை அந்நிறுவனங்களின் இயக்குநர் குழுவால் தற்போது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய இணைப்புத் திட்டத்தின் கீழ், ஐடிஎஃப்சி நிறுவனமானது, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியுடன் இணையவிருக்கிறது. இந்த புதிய இரு நிதி நிறுவனங்களின் இணைப்பானது, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் சொத்துமதிப்பு மற்றும் வருவாய்:
ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி ஆகிய இரு நிதி நிறுவனங்களுமே இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த புதிய நிதி நிறுனங்களின் இணைப்பானது 155:100 என்ற விகிதத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஐடிஎப்ஃசி பங்குதாரர்கள் கொண்டிருக்கும் 100 பங்குகளுக்கு, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் 155 பங்குகள் வழங்கப்படவிருக்கின்றன. இரு நிறுவனப் பங்குகளின் முகமதிப்புமே ரூ.10 என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, ரூ.2.4 லட்சம் சொத்து மதிப்பைக் கொண்டிருக்கிறது ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி. மேலும், ரூ.27,194 கோடி வருவாய் மற்றும் ரூ.2,437 கோடி லாபத்தைக் கடந்த நிதியாண்டில் பதிவு செய்திருக்கிறது. ஐடிஎஃப்சி நிறுவனமோ ரூ.9,570 கோடி சொத்துமதிப்புடன், ரூ.2,076 கோடி வருவாயைக் கொண்டிருக்கிறது.