என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதையினை அமைப்பதற்காக சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. விளை நிலங்களை இவ்வாறு கையகப்படுத்துவதனை பல்வேறு தரப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்தவும், என்.எல்.சி. நிறுவனத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற வலியுறுத்தியும் இன்று(ஜூலை.,28) முற்றுகை போராட்டத்தினை நடத்தினார். என்.எல்.சி.நிறுவன பிரதான நுழைவுவாயிலில் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தில் பாமக கட்சியினரும், விவசாயிகளும் பங்கேற்றனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை
இந்நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு என்.எல்.சி.நிறுவனத்தினை கண்டித்து பேசிய அன்புமணி ராமதாஸை காவல்துறை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் காவல்துறை கைது செய்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாமக'வினர் காவல்துறையினரின் வாகனங்கள் மீது கற்களை வீசியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இது பெரும் கலவரமாக மாறியதையடுத்து காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று தெரிகிறது. முன்னதாக என்.எல்.சி. நிறுவனத்திற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முற்பட்டதாக கூறப்படுகிறது.