அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து ஜெர்மனி தூதுவர் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மன் தூதுவரின் கருத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமான தலையீடு என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவிக்க இன்று ஜெர்மன் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜோர்ஜ் என்ஸ்வீலரை வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை டெல்லியின் சவுத் பிளாக்கில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு ஜோர்ஜ் என்ஸ்வீலர் சென்றிருந்தார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவாலுக்கு நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஜெர்மனி
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் போலவே, திரு கெஜ்ரிவாலுக்கும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற உரிமை உண்டு. விசாரணையில், அவர் தடையின்றி கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும்." என்று தெரிவித்திருந்தார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை ED காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.