டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல்
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று குண்டு வெடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை உறுதி செய்துள்ள தூதரகம், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சியில் இரண்டு சந்தேக நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்கள் சென்ற பாதையை கண்டறிய முயன்று வருகின்றனர். இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாலை 5 மணி அளவில் குண்டுவெடிப்பு
செவ்வாய் மாலை சுமார் 5 மணியளவில் சாணக்கியபுரி இஸ்ரேல் தூதராகத்திற்கு பின்புறம் குண்டு வெடித்ததாக, ஒரு அடையாளம் தெரியாத நபர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், அங்கு ஆய்வு செய்தனர். இருப்பினும் அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை. "மாலை 5:08 மணியளவில், தூதரகத்திற்கு அருகாமையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியும். டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 'சர் அல்லா ரெசிஸ்டன்ஸ்'
அப்பகுதியில் போலீசாரின் தீவிரத் தேடுதலில், இஸ்ரேல் கொடியில் சுற்றப்பட்ட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பக்க கடிதம் ஒன்று கிடைத்தது. மிகவும் ஆட்சியபனைக்குரிய வகையில் எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தில், காசாவில் இஸ்ரேலில் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. காவல்துறை இந்த கடிதம் குறித்து மேலும் எந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை. "சர் அல்லா ரெசிஸ்டன்ஸ்" என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் குழு ஒன்று, குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.