7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்து தனது அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜகவில் சேர வைக்க தலா ரூ.25 கோடி அவர்களுக்கு வழங்க முயற்சித்ததாக பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். அப்படி பாஜகவில் சேரவில்லை என்றால் மதுக் கொள்கை வழக்கில் கைது செய்து விடுவோம் என்று பாஜக அவர்களை மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். மதுபானக் கொள்கை விவகாரத்தில் விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) நான்கு முறை சம்மன் அனுப்பியுள்ளது. "சட்டவிரோதம்" என்றும், "அரசியல் சதி" என்றும் கூறி அவர் ஆஜராகாமல் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டார்.
'அவர்கள் தங்களது மோசமான நோக்கங்களால் தோல்வியடைவார்கள்': கெஜ்ரிவால்
இந்நிலையில், 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பேசி அவர்களை கட்சி மாற்ற முயன்றதாக பாஜக மீது கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், அந்த 7 எம்எல்ஏக்களும் பாஜகவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார். "கடந்த ஒன்பது ஆண்டுகளில், அவர்கள் எங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க பல சதித்திட்டங்களை தீட்டியுள்ளனர். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. கடவுளும் மக்களும் எப்போதும் எங்களை ஆதரித்தனர். எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் வலுவாக ஒற்றுமையாக உள்ளனர். இந்த முறையும் அவர்கள் தங்களது மோசமான நோக்கங்களால் தோல்வியடைவார்கள்." என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், இந்த குற்றசாட்டை நிரூபிக்க, ஒரு பாஜக எம்எல்ஏ, ஆம் ஆத்மி எம்எல்ஏவிடம் பேசிய போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ இருப்பதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது.