விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
உடல்நலக்குறைவு காரணமாக நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் இன்று(டிச.,28) காலை 6.10க்கு காலமானார்.
இவரது தேமுதிக அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்ட நிலையில், இவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரிலும், இணையம் மூலமும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
விஜயகாந்த் உடல் தற்போது சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள அவரது தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்த் உடலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் கரு.நாகராஜன், எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அஞ்சலி
மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசியுள்ளார்.
அப்போது அவர், "ஏழைகளின் குரலாக இருந்த விஜயகாந்த் இன்று நம்மோடு இல்லை. அனைத்து துறைகளிலும் தனது முத்திரையை பதித்த இவர் நம்மை விட்டு சென்று விட்டார்" என்று வருத்தமாக பேசினார்.
தொடர்ந்து அவர், 'விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சிரமப்பட வேண்டியுள்ளது. அவரது உடலுக்கு தொண்டர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது உடலை ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும்' என்றும்,
'விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.