முஸ்லீம் பெண்களிடம் முகத்தை காட்டுமாறு கூறிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதா, வாக்குச் சாவடியில் பர்தா அணிந்திருந்த முஸ்லிம் பெண்களிடம், தங்களின் முகத்தை காட்ட சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. அடையாள அட்டையில் உள்ள புகைப்படங்களுடன் அவர்களது முகம் ஒத்துபோகிறதா என்பதை பார்க்க அவர் முகத்தை காட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பாஜக வேட்பாளருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் மீது மலக்பேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாக்காளரின் அடையாளத்தை வேட்பாளர்கள் சரிபார்க்க முடியாது
இன்று நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குபதிவில் அதிகம் பேசப்படும் வேட்பாளர்களில் செல்வி மாதவி லதாவும் ஒருவர் ஆவார். ஹைதராபாத்தில் நின்று நான்கு முறை எம்.பி ஆகிய AIMIMயின் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு எதிராக மாதவி லதா போட்டியிடுகிறார். ஒருவரது அடையாளத்தை சரிபார்ப்பதற்காக அவரது முக்காட்டை அவிழ்க்க சொல்ல எந்த வேட்பாளருக்கும் உரிமை இல்லை என்பதால் செல்வி மாதவி லதாவின் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்வார்கள் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் கூறியுள்ளார். சந்தேகம் இருந்தால், அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கலாமே தவிர வாக்காளரின் அடையாளத்தை நேரடியாக சரிபார்க்க எந்த வேட்பாளருக்கும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.