ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் ஒரு கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைப்பது இதுவே முதல் முறையாகும். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஹரியானாவில், முதல்வராக உள்ள நயாப் சிங் சைனி முதல்வராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை உமர் அப்துல்லா முதலமைச்சராக வருவார் என பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி
அண்டை மாநிலங்களான டெல்லி மற்றும் பஞ்சாபில் வெற்றி பெற்றதன் விளைவாக ஹரியானாவில் முன்னிலையை நிலைநிறுத்தும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அங்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஹரியானாவில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய தேசிய லோக் தள் 2 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் சுயேட்சைகள் மூன்று இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். எனினும் ஜம்மு காஷ்மீரில் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அங்கு பாஜக 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன. மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்தில் வென்றுள்ள நிலையில், சுயேட்சைகள் 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
பாஜக ஒருபோதும் ஜம்மு காஷ்மீரில் தனித்து ஆட்சி செய்ததில்லை
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாஜக வென்ற பெரும்பாலான இடங்கள் ஜம்முவைச் சேர்ந்தவை என்று இந்திய தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் காஷ்மீர் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்ததாகத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீரில் பாஜக ஒருபோதும் தனித்து ஆட்சி அமைத்ததில்லை. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு துணைநிலை ஆளுநர் ஐந்து எம்எல்ஏக்களை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது. இதில் இரண்டு பெண்கள், இரண்டு காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து குடியேறிய ஒருவர் இடம்பெற முடியும். சட்டசபையில் பாஜகவின் பலத்தை செயற்கையாக கூட்டுவதற்காகவே இந்த ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.