'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை
பாஜக.,கட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக இணைந்திருந்து கள பணிகளை மேற்கொண்டு வந்த பிரபல நடிகை கெளதமி இன்று(அக்.,23) காலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். கட்சி தனக்கு உறுதுணையாக நிற்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 'இன்று காலை கூட கெளதமி என்னுடன் பேசினார். அவரை ஏமாற்றிய நபருக்கும் பாஜக'வுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை" என்று கூறினார். தொடர்ந்து, 'கெளதமி கட்சியில் இருந்து விலகியிருந்தாலும் அவருக்கு பாஜக என்றும் துணை நிற்கும், அவருக்கு தேவையான உதவிகளையும் பாஜக செய்யும்' என்றும், 'அவருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்து தர நான் தயார்' என்றும் கூறியுள்ளார்.
4 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகை
மேலும் பேசிய அவர், கெளதமி கொடுத்த புகாரின்மீது காவல்துறை மிக மெத்தனமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அவர், திமுக அரசு மீது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகாரளிக்கவுள்ளதாக தெரிவித்தார். திமுக அதிகாரத்தினை தவறாக பயன்படுத்துவதாகவும், காவல்துறை தனது அதிகாரத்தினை தவறான வழியில் உபயோகப்படுத்தி பாஜக'வினர் மீது கைது நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது என்றும் குற்றம்சாட்டி பேசினார். தொடர்ந்து அவர், தேசிய தலைமைக்கு தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வரவுள்ளது. இவர்கள் பாதிக்கப்பட்ட பாஜக'வினர் வீடுகளுக்கு செல்லவுள்ளனர் என்றும் கூறினார். இதனிடையே வரும் 27ம் தேதி பாஜக அலுவலகம் வந்து இக்குழுவிடம் பாஜக'வினர் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.