மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி
மணிப்பூர் மாநிலத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் கலவரமாக வெடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இது குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பதே அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி இந்திய மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி அண்மையில் வீடியோ மூலம் செய்தியினை பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறியதாவது, வன்முறை காரணமாக கலவரம் மிகுந்து பாதிப்பிற்குள்ளாகியுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கும், பிரதமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றும், "ஏனெனில் அவர் குறிப்பிட்ட சிலருக்கு தான் பிரதமர், அனைத்து மக்களுக்கும் பிரதமர் இல்லை" என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் வலியினை நினைத்து கவலைப்படுவதில்லை
மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரதமராக மட்டும் மோடி செயல்படுகிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மணிப்பூர் மாநிலமே கலவர தீயில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் நாட்டின் பிரதமர் ஏன் சம்பவ இடத்திற்கு சென்று அதுகுறித்து பேசவில்லை? என்று கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்து, இந்தியர்களுக்கு காயம் ஏற்படுகையில் அவர்களின் வலியினை நம்மால் உணர முடியும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாஜக'வினை சேர்ந்தவர்களால் அதனை உணர முடியாது. பதவிக்காக மணிப்பூரை மட்டுமல்ல உலகத்தினையே அழிக்க துணியும் இவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் வலியினை நினைத்து கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.