ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக
ஹிமாச்சல பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஆளுநரை சந்தித்து பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி, ராஜ்யசபா தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து, மாநில சட்டசபையில், சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ளனர். இது குறித்து, பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர், கட்சி எம்எல்ஏக்களுடன் புதன்கிழமை ராஜ்பவனில் ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்துள்ளார். ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் தாக்கூர்,"ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். தற்போது, காங்கிரஸ் அரசு, ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ளது" என தெரிவித்தார்.
ஹிமாச்சல பிரதேச ராஜ்ய சபா தேர்தலில் பாஜக வெற்றி
நேற்று நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தில், பிஜேபியின் ஹர்ஷ் மகாஜன், காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வியை தோற்கடித்தார். 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதால், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோரை காங்கிரஸ் மேலிடம் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தலில் வாக்களித்துவிட்டு ஆறு எம்.எல்.ஏ.க்களும் சிம்லாவில் இருந்து ஹரியானாவுக்கு புறப்பட்டனர். முன்னதாக புதன்கிழமை அன்று, பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், ஹெலிகாப்டர் மூலம் ஹிமாச்சல் தலைநகருக்கு வாக்களிக்க மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.