தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக நியமித்துள்ளது. தெலுங்கானா அடுத்த வருடம், தெலுங்கானாவின் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஏற்கனவே இருந்த சஞ்சய் குமாருக்குப் பதிலாக, எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜி கிஷன் ரெட்டி பாஜக கட்சியை அம்மாநிலத்தில் வழிநடத்த இருக்கிறார். தெலுங்கானாவின் முதல் நிதியமைச்சராக பணியாற்றிய பாஜக எம்எல்ஏ எடெலா ராஜேந்தர், அடுத்து வரும் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் மாநிலத் தேர்தல் நிர்வாகக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரா ஆந்திரப் பிரதேச பாஜக பொது செயலாளராக தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகள் டக்குபதி புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப்
"பஞ்சாபில் தேசியம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை" ஆதரிக்க விரும்புவதாகக் கூறி, கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு கட்சி தாவிய முன்னாள் எம்பி சுனில் குமார் ஜாகர், பஞ்சாபில் பாஜக கட்சியை வழிநடத்த இருக்கிறார். ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச்சரும், தற்போதைய ஜார்க்கண்ட் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி, பாஜக ஜார்க்கண்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செயற்குழு உறுப்பினர் தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வராக பணியாற்றிய கிரண்குமார் ரெட்டி, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 7ஆம் தேதி , ஜேபி நட்டா தலைமையில் பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.