Loading...
டெல்லி போராட்டத்தில் கர்ப்பிணி பெண் செய்தியாளர் மீது தாக்குதல்? ராகுல் காந்தி மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டு
ராகுல் காந்தி, தம்மை இழுத்துத் தள்ளிவிட்டதாக கர்ப்பிணிப் பெண் செய்தியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்

டெல்லி போராட்டத்தில் கர்ப்பிணி பெண் செய்தியாளர் மீது தாக்குதல்? ராகுல் காந்தி மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
05:31 pm

செய்தி முன்னோட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் INDIA கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட பேரணியின் போது, ராகுல் காந்தி, தம்மை இழுத்துத் தள்ளிவிட்டதாக கர்ப்பிணிப் பெண் செய்தியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்தைக் சுட்டிக்காட்டி பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சி மீதும் ராகுல் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். செய்தியாளர் ரிச்சா பராசர் அளித்த வாக்குமூலத்தில், உச்ச நீதிமன்ற வளாகத்தின் படிகளருகே ராகுல் காந்தியிடம் பேட்டி எடுக்க முயன்றபோது, அவர் கோபத்துடன் தனது கையைப் பிடித்து இழுத்ததாகவும், தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைத் தள்ளிவிட்டதில் அவர் படிகளில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதில் அவருடைய கைகள், முழங்கால்களில் காயம் ஏற்பட்டதுடன், அவரது கேமராமேனும் அவர் மீது விழுந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கண்டனம்

பாஜகவின் கண்டனம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த செய்தியாளர், டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி பாஜக துணைத் தலைவர் ராஜேஷ் பாட்டியா மற்றும் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ஆகியோர் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவம் பற்றிப் பேசும் ராகுல் காந்தி ஒரு பெண் செய்தியாளரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்" என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மறுப்பு

காங்கிரஸின் மறுப்பும் காணொளி விவாதங்களும்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அல்கா லம்பா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

பாஜக அரசியல் லாபத்திற்காக இந்த சம்பவத்தை போலியாக புனைந்து பிரசாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

பேரணியின் போது மக்கள் கூட்ட நெரிசல் காரணமாகவே சலசலப்பு ஏற்பட்டதாகவும், ராகுல் காந்தி யாரையும் வேண்டுமென்றே தள்ளவில்லை என்றும், இணையத்தில் பரவும் காணொளிகள் இதை உறுதி செய்யவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பேரணியின் போது கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் தள்ளுவது போன்ற காணொளிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி, பாஜகவின் விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT