கிழித்தெறியப்பட்ட ராஜினாமா கடிதம்! முடிவை வாபஸ் பெற்ற மணிப்பூர் முதல்வர்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்வதாக காலையிலிருந்து வந்த யூகங்களுக்கு மத்தியில், தற்போது மணிப்பூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர், முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய மாட்டார் என்று உறுதிபட அறிவித்துள்ளார்.
முன்னதாக, பைரேன் சிங் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு ஆளுநரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
இதனால் அவர் பதவி விலகலாம் என்ற ஊகம் வலுத்தது. இதையடுத்து இன்று (ஜூன் 30.,) மதியம் 2.20 மணியளவில், அவர் சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழுவுடன் ராஜினாமா கடிதத்தை எடுத்துக்கொண்டு தனது இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி கிளம்பினார்.
ஆனால் அவரது வீட்டின் வெளியே கூடியிருந்த பெண்கள் அவரை ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல அனுமதிக்கவில்லை.
biren singh says to not resign
ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்ட முதல்வர்
தற்போதைய சூழலில் முதல்வர் ராஜினாமா செய்தால், மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என அங்கு கூடியிருந்தவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து முதல்வர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் சில அமைச்சர்கள் அங்கு கூடிருந்த பொதுமக்களிடையே ராஜினாமா கடிதத்தில் இருந்ததை படித்துக் காட்டி, முதல்வர் ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
அப்போது ராஜினாமா கடிதத்தை பிடுங்கிய பெண்கள், அதை கிழித்து எறிந்தனர்.
இதற்கிடையே முதல்வர் பைரேன் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.