பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
கடந்த 2002ம்ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் ஒன்றில் பில்கிஸ் பானு என்னும் பெண்மணி கலவரக்காரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்தினரும் இந்த கலவரத்தில் கொலைச்செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் கடந்தாண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
இதனால் குஜராத் அரசு மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்நிலையில் சுபாஷினி அலி என்பவர் தொடர்ந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட்.,17) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது 2008ல் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் 11 பேரும், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் இருந்துள்ளனர்.
எனவே, 1992-சட்டதிருத்த தண்டனை குறைப்பதற்கான விதியின்கீழ் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்று குஜராத் அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
விசாரணை
வழக்கின் விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குஜராத் அரசிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதன்படி, 1992-சட்டதிருத்த தண்டனை குறைப்பதற்கான விதி எந்தளவுக்கு நடைமுறையில் உள்ளது?
மற்ற கைதிகளுக்கு இது எந்தளவிற்கு பயன்பட்டுள்ளது?
அதிகபட்ச தண்டனையான குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் தண்டனை குறைப்பு செய்யப்பட்டு அவர்களை எவ்வாறு விடுதலை செய்தீர்கள்?
14 ஆண்டுகள் சிறைவாசம் கொண்டிருந்த கைதிகள் எந்த விதிமுறையின்கீழ் விடுதலை செய்யப்பட்டனர்? என்று பல கேள்விகளை முன்வைத்தனர்.
பின்னர், குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதன் சரியான காரணத்தினை குஜராத் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையினை வரும் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.