பில்கிஸ் பானோ வழக்கு: பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்த குஜராத் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்ய மாநில அரசு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. அந்த உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்த நடவடிக்கையை "மோசடி செயல்" என்றும் கூறியது. இந்த தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் பி.வி. நாகர்தனா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனு செல்லுபடியாகும் என்று கூறியது.
பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டிய விடுவிக்க உத்தரவு பிறப்பித்த குஜராத்
தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மகாராஷ்டிராவில் வைத்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றதால் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் தான் இந்த வழக்கு தொடர்பான உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. "குற்றவாளிக்கு தண்டனை விதித்த மாநிலத்தின்(மகாராஷ்டிரா) அரசாங்கம் தான் அவரக்ளுக்கு மன்னிப்பு வழங்க முடியும். குற்றம் நடந்த மாநிலத்தின்(குஜராத்) அரசாங்கம் அதை செய்ய தகுதியுடையது அல்ல." என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த கலவரத்தில் இருந்து தப்பிச் செல்லும் போது பில்கிஸ் பானோ பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவர் 21 வயது கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.