இந்தியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு
இந்தியாவின் மிக வயதான உள்நாட்டு ஆசிய யானை தனது 89வது வயதில் நேற்று(ஆகஸ்ட் 21) காலமானது. பிஜூலி பிரசாத் என்று அழைக்கப்படும் ராட்சத ஜம்போ யானை முதிர் வயது காரணமாக தி வில்லியம்சன் மாகோர் குழுமத்தின் பெஹாலி தேயிலை தோட்டத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தது. பிஜூலி பிரசாத் ஓய்வு பெற்ற பிறகு, அந்த தேயிலை தோட்டத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கார்ப்பரேட் ஊதியத்தில் இரண்டு யானை காப்பாளர்கள், பிஜூலி பிரசாத்தை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர். அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த அந்த யானைக்கு ஒவ்வொரு நாளும் மூன்று ராஜ போக விருந்துகள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், ஒவ்வொரு வாரமும் பிஜூலி பிரசாத்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
யானையின் இறுதி சடங்குக்கு கூடிய மிகப்பெரும் கூட்டம்
கடைசியாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, பிஜூலி பிரசாத்தின் எடை 400 கிலோவாகும். "எனக்கு தெரிந்தவரை, பிஜூலி பிரசாத் தான் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மிகப் வயதான வளர்ப்பு யானை" என்று பத்மஸ்ரீ விருது பெற்றவரும் யானை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் குஷால் கோன்வர் சர்மா கூறியுள்ளார். "பொதுவாக, காட்டு ஆசிய யானைகள் 62-65 ஆண்டுகள் வரை வாழும். நன்றாக கவனிக்கப்படும் வளர்ப்பு யானைகள் சுமார் 80 ஆண்டுகள் வரை வாழும்" என்று அவர் மேலும் கூறினார். 89 வயது பிஜூலி பிரசாத் உயிரிழந்ததை அடுத்து, ஒரு பெரும் இறுதி சடங்கு நடத்தப்பட்டது. அந்த இறுதி சடங்கில் விலங்கு பிரியர்கள், தேயிலை தோட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.