புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது
தமிழகத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி போலி வீடியோக்களை தயாரித்ததற்காக பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் இன்று(மார் 18) கைது செய்யப்பட்டார். பீகார் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் இவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்யப், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அந்த காவல் நிலையத்தின் பொருளாதார குற்றப்பிரிவு அவரது உடமைகளை பறிமுதல் செய்ய அவரது வீட்டை அடைந்தனர். தமிழகத்தில் பணிபுரியும் பீகார் வாசிகள் குறித்து தவறான வீடியோக்களை பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்ட அறிக்கை
"தென் மாநில தொழிலாளர் பிரச்சனை குறித்த போலி செய்தி விவகாரத்தில் பீகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்ட காஷ்யப், உடமைகளை பறிமுதல் செய்துவிடுவோம் என்ற அச்சத்தில் சனிக்கிழமை காவல்துறையில் சரணடைந்தார்." என்று பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்படுவது/தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்புவதில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் காஷ்யப் மற்றும் பிறருக்கு எதிராக EOU மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை 13 வழக்குகளை பதிவு செய்துள்ளது.