திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர்
முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, தமிழ்நாடு மாநில திருவாரூர் மாவட்டத்தில் தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இது காட்டூரில் உள்ள தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கோட்டத்தில் கலைஞரின் பொது வாழ்வினை சித்தரிக்கும் வகையிலான அருங்காட்சியகங்கள், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கோட்டமானது நாளை(ஜூன்.,20) திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவினையொட்டி காலை 10 மணிமுதல் நிகழ்ச்சிகள் துவங்கவுள்ளது. அதன்படி, கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மதியம் 3.30 மணியளவில் பாட்டரங்கம் நடக்கும் நிலையில், அதன் பின்னரே இந்த கோட்டத்தின் திறப்பு விழா அரங்கேறவுள்ளது.
விழா முடிந்ததும் நாளை மாலை பீகார் புறப்படும் முதல்வர் நிதிஷ் குமார்
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் சிலையினை திறந்துவைத்து உரையாற்றவுள்ளார். அதனையடுத்து, கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் திறந்துவைத்து பேசவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் முத்துவேலர் நூலகத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள வரும் பீகார் முதல்வர் நாளை காலை ஹைதராபாத் வழியே திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து அவர் திருவாரூர் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். மதிய வேளையில் சுமார் 2.30மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கவுள்ள நிலையில், 4.30 மணிக்கு விழா முடிந்ததும் மீண்டும் திருச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று, அங்கிருந்து பீகார் சென்றடைகிறார் முதல்வர் நிதிஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.