பீகாரில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
மாநில வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை பீகார் சட்டசபை வியாழக்கிழமை (நவம்பர் 9) ஒருமனதாக நிறைவேற்றியது. இது உச்ச நீதிமன்றத்தின் 50 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்பை மீறும் நடவடிக்கையாகும். எனினும், திருத்தப்பட்ட மசோதா சட்டமாக வேண்டும் எனில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கையெழுத்திட வேண்டும். பெண் கல்வி மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து மாநில முதல்வர் நிதிஷ் குமார் இந்த வாரம் கூறிய கருத்து தொடர்பாக பீகார் சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் இந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய திருத்தத்தின்படி இட ஒதுக்கீடு
திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு இருக்கும். அதே சமயம் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 18 மற்றும் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பழங்குடி இனத்தவருக்கு இரண்டு சதவீத இடஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 16 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும் இடஒதுக்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஏற்கனவே இருந்த மூன்று சதவீத இடஒதுக்கீடு புதிய சட்டத்திருத்தத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மசோதா, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மத்திய அரசின் கட்டாயமான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்துகிறது.