உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், தற்போதுள்ள எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் சேராமல், MBBS இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று(மார்-28) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. "எந்த இந்திய மருத்துவக் கல்லூரியிலும் சேராமல், தற்போதுள்ள NMC பாடத்திட்டம் மற்றும் வழிகாட்டுதல்களின்படி, பகுதி-1 மற்றும் பகுதி-2 தேர்வுகள்(தியரி மற்றும் பிராக்டிகல்) எழுதி MBBS இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் ஒரு வருட காலத்திற்குள் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். பகுதி-1 முடிந்து ஒரு வருடத்திற்கு பின் பகுதி-2 நடத்தப்படும். பகுதி-1இல் தேர்ச்சி பெற்றிந்தால் மட்டுமே பகுதி-2இல் கலந்துகொள்ள முடியும்." என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மாணவர்கள் கட்டாய இன்டெர்ன்ஷிப்பை முடிக்க வேண்டும்
மத்திய அரசு சார்பில் ஆஜரான ஏஎஸ்ஜி ஐஸ்வர்யா பாடி, நீதிபதிகள் பி ஆர் கவாய் மற்றும் விக்ரம் நாத் அமர்வுக்கு இந்த தகவலை தெரிவித்தார். மேலும், இந்த இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் இரண்டு வருட கட்டாய சுழற்சி இன்டெர்ன்ஷிப்பை முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. NMC முடிவு செய்தபடி, இந்த இன்டெர்ன்ஷிப்பின் முதல் ஆண்டு இலவசமாகவும், இரண்டாவது ஆண்டு பணம் கட்டி வேலை செய்வது போலவும் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.