கனடாவில் வாழும் இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துக்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பின் தலைவரும் காலிஸ்தான் பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னூனின் வீடுகள் மற்றும் நிலங்கள் பஞ்சாப் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி(SFJ), கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி இந்துக்களுக்கு கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தது. "இந்திய-இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேறுங்கள்; இந்தியா செல்லுங்கள். நீங்கள் இந்தியாவை ஆதரிப்பது மட்டுமல்லாமல், காலிஸ்தான் சார்பு சீக்கியர்களின் பேச்சை அடக்குவதையும் ஆதரிக்கிறீர்கள், "என்று SFJ இன் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் பன்னுன் ஒரு வீடியோவில் கூறி இருந்தார்.
பன்னூனின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு சொந்தமானதாக மாற்றப்பட்டது
இந்நிலையில், பஞ்சாப்பில் இருக்கும் அந்த பயங்கரவதிக்கு சொந்தமான சொத்துக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு, பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அவரது வீட்டையும், அமிர்தசரஸில் இருக்கும் அவருக்குச் சொந்தமான நிலத்தையும் இன்று பறிமுதல் செய்தது. பன்னூன் மீது பஞ்சாபில் மூன்று தேசத்துரோக வழக்குகள் உட்பட 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் அமிர்தசரஸ் மாவட்டத்தின் புறநகரில் அமைந்துள்ள அவரது பூர்வீக கிராமமான கான்கோட்டில் இருக்கும் 46 கனல் விவசாய சொத்துக்களும் அடங்கும். சண்டிகரின் செக்டார் 15-யில் உள்ள ஒரு வீடும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த சொத்துக்களின் உரிமை பன்னூனிடம் இருந்து பறிக்கப்பட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்களாக மாற்றப்பட்டுள்ளன.