படிக்க வைத்து போலீஸ் ஆக்கினார் கணவர்; அதிகாரம் வந்தவுடன் விவாகரத்து கேட்ட மனைவி; போபாலில் ஒரு வினோத வழக்கு
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒரு விசித்திரமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றும் நபர், தனது மனைவியின் நீண்ட நாள் கனவான காவல்துறை பணியில் சேருவதற்கு முழு ஆதரவு அளித்துள்ளார். பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் ஒத்துழைப்பு வழங்கி, தனது மனைவியை ஒரு போலீஸ் அதிகாரியாக மாற்றியுள்ளார். ஆனால், அவர் அதிகாரி ஆன பிறகு கதையே மாறிவிட்டது. தனது லட்சியத்தை அடைந்த பிறகு, அந்தப் பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னுடைய நவீன வாழ்க்கை முறைக்குத் தடையாக இருப்பதாகக் கூறி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிர்ச்சி
அர்ச்சகம் குடும்பம் அதிர்ச்சி
தான் இப்போது ஒரு உயரிய பொறுப்பில் இருப்பதாகவும், தனது கணவரின் வாழ்க்கை முறை மற்றும் அர்ச்சகர் குடும்பப் பின்னணி தனக்குச் செட் ஆகவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அர்ச்சகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அர்ச்சகர் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். "அவரது கனவுக்காக நான் எல்லா தியாகங்களையும் செய்தேன். அவர் போலீஸ் ஆடை அணிவதையோ அல்லது நவீனமாக இருப்பதையோ நான் ஒருபோதும் தடுத்ததில்லை. ஆனால், இன்று அதிகாரம் கிடைத்தவுடன் என்னைத் தரம் தாழ்ந்தவனாகப் பார்த்துப் பிரிய நினைப்பது வேதனை அளிக்கிறது" என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மனைவியின் முன்னேற்றத்திற்காகத் உழைத்த கணவருக்கு இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
நீதிமன்றம்
நீதிமன்றத்தின் நிலைப்பாடு
குடும்ப நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, இருவரையும் மீண்டும் பேசி சமாதானம் செய்ய முயற்சிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் துணை நின்ற கணவரை, முன்னேற்றம் அடைந்த பிறகு கைவிடுவது சமூக ரீதியாகப் பல விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் போபால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நவீன உறவுகளில் இருக்கும் சிக்கல்களைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.