121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா?
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஹத்ராஸின் புல்ராய் முகல்கதி கிராமத்தில் போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் ஹரி என்ற சாமியாரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வை மனவ் மங்கள் மிலன் சத்பவனா சமகம் கமிட்டி ஏற்பாடு செய்தது. இந்த சம்பவம் குறித்து புகாரளிக்கப்பட்டதையடுத்து, அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் கூட்டத்திற்கு இடமளிக்க முடியாத அளவுக்கு சிறியதாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு, அமைப்பாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
யாரிந்த போலே பாபா?
போலே பாபா என்று அழைக்கப்படும் ஆன்மீகத் தலைவர் நாராயண் சாகர் ஹரி, எட்டாவில் உள்ள பாட்டியாலியைச் சேர்ந்தவர். இவரது சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரம்ப காலங்களில், போலே பாபா தனது தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் காவல்துறையில் சேர்ந்தார். உத்தரபிரதேச காவல்துறையின் உள்ளூர் புலனாய்வு பிரிவில் அவர் பணியாற்றினார். 17 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்து வந்த அவர், ஒரு கட்டத்தில் தன்னை தானே ஒரு ஆன்மீக தலைவராக அறிவித்து கொண்டார். 1990களில் மத போதகராக உருவெடுத்த போலே பாபா, தனது காவல்துறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மத போதனைகள் செய்ய தொடங்கினார்.