ராஜஸ்தான் முதல்வராகிறார் முதல்முறை MLA பஜன்லால் சர்மா
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக, எம்எல்ஏ பஜன்லால் சர்மாவை பாஜக கட்சி நியமித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி பார்வையாளர்களான வினோத் தாவ்டே மற்றும் சரோஜ் பாண்டே ஆகியோர் சந்தித்த பிறகு, இந்த அறிவிப்பு வந்தது. இவர்களுடன் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பிரகலாத் ஜோஷியும் உடன் இருந்தார். முன்னதாக, பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் அனைத்தும் புதிய முகங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக நமது நியூஸ்பைட்ஸ் தமிழில் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அந்த வகையில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானிலும் புதிய முகத்தையே முதல் அமைச்சராக தேர்வு செய்துள்ளது அக்கட்சி.
RSS மாணவராக அரசியலில் அடியெடுத்து வைத்த பஜன்லால் சர்மா
பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்தவர். ஆனால் அந்த இடம் வெற்றி பெறக்கூடியதாகக் கருதப்படாததால், அவருக்கு அங்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. சங்கனூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் பாஜகவில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கட்சி பொதுச் செயலாளர்களில் ஒருவர் ஆவர். தனது ஆரம்ப அரசியல் நாட்களில், பிஜேபியின் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உடன் இருந்துள்ளார். 56 வயதான சர்மா முதுகலைப் பட்டதாரி என்று தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் கூறுகிறது.