LOADING...
பெங்களூரு பெண் பொறியாளர் மரணம்: கொலையை மறைக்க தீ வைத்த 18 வயது இளைஞர்
18 வயது கல்லூரி மாணவன் ஒருவன் ஷர்மிளாவின் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக நுழைந்தது தெரியவந்தது

பெங்களூரு பெண் பொறியாளர் மரணம்: கொலையை மறைக்க தீ வைத்த 18 வயது இளைஞர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2026
08:42 am

செய்தி முன்னோட்டம்

பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமண்யா லேஅவுட் பகுதியில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி இரவு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 34 வயதான மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா குஷாலப்பா என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக முதற்கட்டமாக கருதப்பட்டது. மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது இது ஒரு கொடூரமான கொலை என்பது தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேகம்

தோழியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்

தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்மிளா, பெங்களூருவில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவரது தோழி சொந்த ஊருக்கு சென்றிருந்ததால், ஷர்மிளா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஷர்மிளாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது நண்பர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 18 வயது கல்லூரி மாணவன் ஒருவன் ஷர்மிளாவின் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக நுழைந்தது தெரியவந்தது.

கைது

பக்கத்து வீட்டு இளைஞன் தான் கொலையாளி என கண்டுபிடிப்பு

அந்த இளைஞன் ஷர்மிளாவிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும், அவர் அதனை எதிர்த்தபோது அவரது மூக்கு மற்றும் வாயை அழுத்தி மூச்சடைக்க செய்து கொலை செய்ததும் அம்பலமானது. பின்னர், கொலையை மறைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும், ஷர்மிளாவின் ஆடைகளை அவர் மீதே போட்டு தீ வைத்துவிட்டு, அவரது செல்போனுடன் அந்த இளைஞன் தப்பியோடியுள்ளான். தடயவியல் துறை (FSL) நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் அந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விபத்து என நம்பப்பட்ட ஒரு சம்பவம், திட்டமிட்ட கொலையாக மாறியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement