பெங்களூரு கடைகளில் உள்ள சைன்போர்டுகள் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம்
பிப்ரவரி மாத இறுதிக்குள் பெங்களுரு கடைகளின் சைன்போர்டுகள் கன்னட மொழிக்கு மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் வர்த்தக உரிமங்கள் ரத்து செய்யப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சைன்போர்டுகளில் உள்ள எழுத்துக்கள் குறைந்தது 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே(பிபிஎம்பி) அறிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்காத கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மால்களின் உரிமம் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ரத்து செய்யப்படும் என்று ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே(பிபிஎம்பி)கூறியுள்ளது. பெங்களூருவில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் கன்னட மொழி பயன்படுத்துவது தொடர்பான கூட்டம் பிபிஎம்பி கமிஷனர் துஷார் கிரிநாத் தலைமையில் இன்று நடைபெற்றது.
விதிகளை பின்பற்றாத கடைகளின் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும்
அனைத்து ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற கடைகளின் பெயர் பலகைகளில் கன்னடத்தை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்றும், இதை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூருவின் குடிமை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. பெயர் பலகைகளில் கன்னட மொழி பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை அனைவரும் சரியாக கடைபிடிக்கிறார்களா என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத கடைகளின் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் சிக்பேட்டை பகுதியில் மொழி பிரச்சனையால் மார்வாரி விற்பனையாளர்கள் மீது கன்னட சார்பு குழு ஒன்று தாக்குதல் நடத்தியது. அதனையடுத்து, கன்னடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.