Loading...
பெங்களூரில் 108 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: ஜூலை மாத மழைப்பொழிவு கடும் சரிவு!
பெங்களூரில் ஜூலை மாத மழைப்பொழிவு கடும் சரிவு

பெங்களூரில் 108 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: ஜூலை மாத மழைப்பொழிவு கடும் சரிவு!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2026
05:11 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக தலைநகர் பெங்களூரு கடந்த 108 ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த மழைப்பொழிவை ஜூலை மாதத்தில் பதிவு செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை பொய்த்தபோதிலும், கோடைக்கு பிந்தைய மழைப்பொழிவு நகரின் ஆண்டின் ஒட்டுமொத்த மழை அளவை ஓரளவுக்கு சமன் செய்து காப்பாற்றியுள்ளது. நடப்பு ஜூலை மாதத்தில் பெங்களூரு நகரம் வெறும் 23 மி.மீ மழையை மட்டுமே பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வரலாற்று பதிவுகளின்படி, கடந்த 1918ஆம் ஆண்டு ஜூலையில் மிகக் குறைவாக 18.5 மி.மீ மழை பதிவான நிலையில், தற்போது 108 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அத்தகைய வறண்ட சூழல் உருவாகியுள்ளது. வழக்கமாக ஜூலையில் 80 முதல் 100 மி.மீ வரை பெய்ய வேண்டிய மழை, இம்முறை மிகக் கடுமையாகக் குறைந்துள்ளது.

தற்போதைய நிலை

பருவமழை பின்னடைவு மற்றும் தற்போதைய நிலை

பருவமழை தொடக்கத்தின் போது நகரில் 70 மி.மீ வரை மழை பெய்து உபரியாக இருந்தபோதிலும், ஜூலை மாதத்தின் பலவீனமான பருவமழையால் மொத்த அளவு 94 மி.மீ ஆக மட்டுமே உயர்ந்தது.

இருப்பினும், அரபிக்கடலோர பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நகரின் சில பகுதிகளில் அண்மையில் மிதமான மழை பெய்து சற்று ஆறுதல் அளித்துள்ளது.

இந்திய வானிலை மையத்தின் கணிப்புப்படி, ஆகஸ்ட் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலத்தில் பெங்களூரில் மீண்டும் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இருப்பினும், அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் முழுவதும் பருவமழை தொடர்ந்து பலவீனமாகவே இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

மழைப்பொழிவு

வருடாந்திர மழைப்பொழிவு நம்பிக்கை

ஜூலை மாதம் வரலாறு காணாத வறட்சியைக் கண்டபோதிலும், கோடைக்காலத்திற்கு முன்பாக பெய்த கனமழை காரணமாக நகரின் ஒட்டுமொத்த வருடாந்திர மழை அளவு இன்னும் இயல்பு நிலையிலேயே நீடிக்கிறது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் பெங்களூரின் முதன்மையான மழைக்காலங்கள் என்பதால், வரும் மாதங்களில் பெய்யும் மழை நகரின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT