வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்
தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் விமான நிலைய வளாகத்திற்குள் செல்ல ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்ற புதிய கட்டண முறையை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு திங்கள்கிழமை முதல் பயணம் செய்வது விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏழு நிமிடங்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் இருக்கும் வாகனங்களுக்கு ரூ.150 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓலா மற்றும் ஊபர் போன்ற கால்டாக்சிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டண திட்டம் ரத்து
ஓலா மற்றும் ஊபர் போன்ற கால்டாக்சி நிறுவனங்களால் இயக்கப்படும் வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும். வாகனங்கள் ஏழு நிமிடங்களுக்கு மேல் விமான நிலைய வளாகத்திற்குள் இருந்தால் அதற்கான கட்டணம் ரூ.300 ஆக உயரும். புதிய கட்டண அமைப்பு விமான நிலையத்தின் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 2 ஆகிய இரண்டிலும் பொருந்தும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் விமான நிலைய வளாகத்திற்குள் செல்ல விதிக்கப்பட்டிருந்த புதிய கட்டண முறையை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.