Page Loader
மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை 
பிபிசி இந்தியா மீது அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Apr 13, 2023
03:08 pm

செய்தி முன்னோட்டம்

அந்நியச் செலாவணி மீறல்கள் தொடர்பான புதிய விசாரணைக்காக, நிதி விவரங்களை சமர்ப்பிக்குமாறு இந்தியாவில் உள்ள பிபிசியிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசியிடம் வருமான வரி தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. பிபிசியின் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இன்று(ஏப் 13) அமலாக்க இயக்குநரகத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்(FEMA) கீழ் பிபிசி இந்தியா மீது அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. பிபிசியின் கணக்குப் புத்தகங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அமலாக்க இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சில மாதங்களுக்கு முன் 3 நாள் சோதனை நடத்தியது.

details

தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் 

மூன்று நாள் நடைபெற்ற வருமான வரி ஆய்வின் மூலம் பிபிசியின் கணக்குப் புத்தகங்களில் முறைகேடுகளைக் கண்டறிந்ததாக இந்திய வருமான வரித்துறை அப்போது தெரிவித்ததது. இந்த சோதனையின் போது, ​​மூத்த பிபிசி ஊழியர்கள் வருமான வரித்துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்க இரவும் பகலுமாக அலுவலகத்தில் தங்கி இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதால் இது பரபரப்பாக பேசப்பட்டது. இதை ஒரு பழிவாங்கும் செயல் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி பற்றி வெளியான பிபிசி ஆவணப்படம் முற்றிலுமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.