பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு'
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 10 பிபிசி ஊழியர்கள், வருமான வரித் துறை "ஆய்வு" தொடங்கியதிலிருந்து வீட்டிற்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித் தகவல்களைப் பற்றி ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள பிபிசி, வழக்கம் போல் தங்கள் செய்திகளை ஒளிபரப்புவதாகவும், பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
45 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் சோதனை
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை(பிப் 14) காலை 11:30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை தற்போது 45 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பண பரிவர்த்தனைகள், நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செய்தி நிறுவனத்தைப் பற்றிய பிற விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியின் ஒரு பகுதியாக மின்னணு சாதனங்களிலிருந்து தரவை நகலெடுக்கின்றனர் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட மெத்தைகளை வைத்து பிபிசி அலுவலக்திற்குள்ளேயே தூங்குவதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்களாம்.