LOADING...
இனி சுங்கச்சாவடியில் நிற்கத் தேவையில்லை: 2026 இறுதிக்குள் MLFF முறை அறிமுகம்; நிதின் கட்கரி தகவல்
2026 இறுதிக்குள் சுங்கச்சாவடியில் MLFF முறை அறிமுகம்

இனி சுங்கச்சாவடியில் நிற்கத் தேவையில்லை: 2026 இறுதிக்குள் MLFF முறை அறிமுகம்; நிதின் கட்கரி தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 18, 2025
01:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக இனி சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தவோ அல்லது மெதுவாகச் செல்லவோ தேவையில்லை. இதற்காக 'மல்டி-லேன் ஃப்ரீ ப்ளோ' (MLFF) எனப்படும் தடையற்றத் தானியங்கித் சுங்கம் வசூலிக்கும் முறை வரும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம்

இது எப்படி செயல்படும்?

தற்போதுள்ள ஃபாஸ்டேக் முறைக்கு அடுத்தக் கட்டமாக, செயற்கைக்கோள் அடிப்படையிலான GNSS (Global Navigation Satellite System) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்துகிறது. நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளத் தானியங்கி கேமராக்கள், வாகனத்தின் நம்பர் பிளேட்டைப் படம் பிடித்து, வாகனம் 80 கிமீ வேகத்தில் செல்லும்போதே தானாக அவர்களின் கணக்கில் இருந்து கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும். சுங்கச்சாவடிகளில் உள்ளத் தடுப்புக் கம்பிகள் முற்றிலுமாக அகற்றப்படும். இதனால் வாகனங்கள் நிற்காமல் தடையின்றிப் பயணிக்க முடியும். நீங்கள் எவ்வளவுத் தூரம் நெடுஞ்சாலையைப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தத் தூரத்திற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கும் முறையும் இதில் அடங்கும்.

நன்மை

இதனால் என்ன லாபம்?

நாடாளுமன்றத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசிய அமைச்சர், இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டார். அவை பின்வருமாறு:- வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் செல்வதால் ஆண்டுக்கு சுமார் ₹1,500 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சமாகும். சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் உள்ள முறைகேடுகள் மற்றும்த் திருட்டுகள் தடுக்கப்படுவதால், அரசின் வருவாய் ஆண்டுக்குச் சுமார் ₹6,000 கோடி வரை அதிகரிக்கும். இந்தியாவில் முன்பு 16 சதவீதமாக இருந்த சரக்கு போக்குவரத்து செலவு, தற்போது 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

Advertisement

நிலவரம்

தற்போதைய நிலை

இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவில் 10 இடங்களில் சோதனை அடிப்படையில் முன்னோட்டமாக (Pilot project) வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விரிவுபடுத்தி, 2026 ஆம் ஆண்டு முடிவதற்குள் 100 சதவீதத் தடையற்ற சுங்கச்சாவடி முறையை இந்தியா எட்டும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மேலும், பழையப் பாக்கிகள் அல்லது ஈ-சலான் நிலுவையில் இருந்தால், வாகனத்தை விற்கும் போதோ அல்லது பதிவைப் புதுப்பிக்கும் போதோ அவற்றைச் செலுத்த வேண்டியக் கட்டாயமும் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

Advertisement