10 மணி நேர 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடியில் இருந்து பெற்றோரை மீட்ட 8ஆம் வகுப்பு மாணவன்; சாமர்த்திய சிறுவன்
செய்தி முன்னோட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் பிரேம் நகர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சஞ்சய் சக்சேனா மற்றும் அவரது மனைவிக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. தங்களை ஒரு புலனாய்வு முகமையின் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர்கள், சஞ்சய் சக்சேனாவுக்குப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், பல கோடி ரூபாய் மோசடியில் அவருக்குப் பங்கு இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். மேலும், வீடியோ காலில் ஒரு போலி கைது வாரண்டையும் காட்டி அவர்களைப் பயமுறுத்தியுள்ளனர். இதுதான் 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனப்படும் நவீன கால சைபர் மோசடியின் தொடக்கமாகும்.
உளவியல் அழுத்தம்
10 மணி நேரக் கண்காணிப்பும் உளவியல் அழுத்தமும்
மோசடி கும்பல் அந்தத் தம்பதியை சுமார் 10 மணி நேரம் வீடியோ காலிலேயே வைத்திருக்கச் செய்துள்ளது. "நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள், கேமராவை விட்டு நகரக்கூடாது, சாப்பிடுவது, தூங்குவது என அனைத்து நடவடிக்கைகளும் கேமரா முன்பே நடக்க வேண்டும்" என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். பயத்தில் உறைந்து போன அந்தத் தம்பதியிடம் இருந்து அவர்களது வங்கி விபரங்களையும் அந்த கும்பல் ரகசியமாகப் பெற்றுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் சுருட்ட அந்த கும்பல் தயாராக இருந்த நிலையில், அந்த வீட்டில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது.
8ஆம் வகுப்பு மாணவன்
8ஆம் வகுப்பு மாணவன் தன்மயின் அதிரடி நடவடிக்கை
சஞ்சய் சக்சேனாவின் மகன் தன்மய், 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். நீண்ட நேரமாகத் தனது பெற்றோர் போனில் மிரட்டப்படுவதையும், அவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதையும் கவனித்த தன்மய், இது ஏதோ ஒரு மோசடி என்பதை உணர்ந்தான். பெற்றோர் கடும் பயத்தில் தடுத்த போதிலும், நள்ளிரவில் துணிச்சலாகச் செயல்பட்ட தன்மய், சட்டென்று போனை வாங்கி 'ஃபிளைட் மோடு' வசதிக்கு மாற்றினான். இதன் மூலம் மோசடி கும்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்தச் சிறுவனின் இந்த ஒரு சிறிய செயல், பல லட்ச ரூபாய் பணத்தைப் பறிபோகாமல் தடுத்தது.
விசாரணை
போலீஸ் விசாரணை மற்றும் எச்சரிக்கை
மறுநாள் காலையில் அந்த குடும்பத்தினர் பிரேம் நகர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தனர். அப்போது மீண்டும் அந்த கும்பல் போன் செய்ய முயன்ற போது, காவல்துறையினர் அந்த அழைப்பை ஏற்றுப் பேசியுள்ளனர். போலீஸ் குரலைக் கேட்டதும் அந்த கும்பல் இணைப்பைத் துண்டித்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எஸ்.பி சிட்டி மனுஷ் பரிக், "டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் எந்த ஒரு சட்டபூர்வமான நடவடிக்கையும் கிடையாது. யாராவது இதுபோல மிரட்டினால் உடனே போலீஸை அணுகுங்கள், வங்கி விபரங்களை யாருடனும் பகிராதீர்கள்." எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 8ஆம் வகுப்பு மாணவன் தன்மயின் இந்த சமயோசித புத்தியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.