ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி
இந்திய பங்குச்சந்தையில் இன்று முக்கிய அளவுகோல் குறியீடுகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்று காலையிலேயே உயர்வைச் சந்தித்தது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்குகள். இன்று காலை அதிகபட்சமாக 3.50% உயர்வைச் சந்தித்து ரூ.194.80 என்ற விலையை தேசிய பங்குச்சந்தையில் தொட்டுச் சென்றது. இதனைத் தொடர்ந்து இன்று முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா. இந்திய பொதுத்துறை வங்கிகளில் SBI வங்கிக்கு அடுத்தபடியாக ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய இரண்டாவது பொதுத்துறை வங்கியாகியிருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா. இந்தியாவின் அதிக சந்தை மதிப்பை கொண்ட முதல் பொதுத்துறை வங்கியாக இயங்கி வரும் SBI வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.5.07 லட்சம் கோடி.
இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள்:
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ.17.29 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக விளங்கி வருகிறது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். அதனைத் தொடர்ந்து, டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் அதிக சந்தை மதிப்பைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட வங்கியாக விளங்கி வருகிறது எச்டிஎஃப்சி வங்கி. அதனைத் தொடர்ந்து, ரூ.6.44 லட்சம் கோடி மதிப்புடன் ஐசிஐசிஐ, 5.07 லட்சம் கோடி மதிப்புடன் எஸ்பிஐ ஆகிய வங்கிகள் இடம்பிடித்திருக்கின்றன. ரூ.1 லட்சம் கோடி மதிப்புடன் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட வங்கிகள் பட்டியலில் 6-வதாக இணைந்திருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா வங்கி.